Saturday, 18 October 2014

தம்பிரான் வணக்கம்

கால சுப்ரமணியம்


இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல், தமிழின் முதல் அச்சு நூல், அச்சில் வெளிவந்த முதல் தமிழாக்க மொழிபெயர்ப்பு நூல் என்ற பெருமைபெற்றது 1578 இல் அண்ட்ரிக் அடிகள் எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட தம்பிரான் வணக்கம் என்ற தமிழ்ப் புத்தகம்.

 

ம்பிரான் வணக்கம் 1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அச்சு நூல்இந்த நூலை அண்ட்ரிக் (ஹென்றிக்கே ஹென்றிக்கஸ் - Henrique Henriques / Antrique Andriquez) என்ற போர்த்துக்கீசிய சேசு சபை கத்தோலிக்க பாதிரியார் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்டார். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட Doctrina Christam என்ற கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இதுதான் தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழி தான் முதன் முதலாக அச்சு நூல் வெளியிடப்பட்டது. புத்தகம் பதிப்பிக்கப்பட்ட இடம் கொல்லம் என்றும், பதிப்பு நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறியமுடிகிறது.கிறிஸ்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் யேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா என்று  கருதுகிறார்கள். கிபி 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் பல கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்து கிறிஸ்தவ மறையைப் பரப்பினார்கள். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள் : புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552), அண்ட்ரிக் அண்ட்ரிக்கி (1520-1600), ராபர்ட் தெ நோபிலி (1577-1656), எப்ரேம் தெ நேவேர் (1603-1695), புனித அருளானந்தர் (1647-1693), வீரமாமுனிவர் (1680-1746).
கிபி 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புரோட்டஸ்டண்டு சபைகளைச் சார்ந்த கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்த்தார்கள். அவர்கள் ஹாலாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து, தமிழகத்தில் கிறிஸ்தவ மறையைப் பரப்பினார்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள் : பர்த்தலோடிமியு சீகன்பால்க் (1682-1719), ராபர்ட் கால்டுவெல் (1814-1891), ஜி. யூ. போப் (1820-1908).
காலனிய, உள்ளூர் அரசியல், மத காரணங்களாலும் 1547ஆம் ஆண்டில் சோழமண்டலக் கடற்கரையில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய யூதர் ஹென்றிக்கே ஹென்றிக்கஸ் (1520-1600) என்னும் சேசு சபை மறைபரப்பாளரின் முயற்சியாலும் ரோமானிய வரிவடிவிலும் தமிழ் வரிவடிவிலும் தமிழில் அச்சிடுவது நிறைவேறியது. தமிழகத்தில் தங்கிப் பணியாற்றிய காலத்தில் ஐந்து வெவ்வேறான தமிழ் நூல்களை மேற்கு கடற்கரையின் பல்வேறு சேசு சபை குடியிருப்புக்களிலிருந்து தமிழ் வரிவடிவில் அண்ட்ரிக் வெளியிட்டார். மேலும் தமிழின் இலக்கணம்,  அகராதி போன்றவற்றையும் தொகுத்திருந்தார். அச்சிடப்படாதபோதும் இந்நூல்கள் தொடக்க கால ஐரோப்பியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்ததன. அண்ட்ரிக் பற்றி, ‘இந்திய மொழி ஒன்றில் ஆழ்ந்த புலமை பெற்ற முதல் ஐரோப்பிய அறிஞர்,’ என கிரகாம் ஷா  குறிப்பிடுகிறார்.
அண்ட்ரிக் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. கிபி 1546 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை கோவாவில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித பிரான்சிஸ் சேவியரின் (Saint Francis Xavier, 1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர், முதல் தமிழ்  அச்சுப் புத்தகமான ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் நூலை வெளியிட்டார். பாமர மொழியில் சமய மந்திரங்களை அனைத்து சாதியினரும் பயின்று உச்சரிக்கப்படும் மரபை மீறிய ஒரு எதிர் பண்பாட்டை உருவாக்கினார். இவர் ‘தமிழ் அச்சுக்கலையின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க அவர் ஏற்பாடு செய்தார். கோன்சால்வசஸ் என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன. அண்ட்ரிக் இறந்த பின்னர் இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
1865ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலநூலான ‘தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை’ (Classified catalogue of Tamil printed books), 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது.  1867-1900 ஆண்டுகளில் 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதாகவும்,  நாற்பது ஆண்டுகளில் (1860-1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதாகவும் விபரங்கள் தெரிகின்றன.
முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ, தோமா த குருசு ஆகியோர்.   இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும்  கருதுகிறார்கள். ‘கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ்’ (Cartilha ē lingoa Tamul e Portugues) (‘தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சுவடி’ என்பது இதன் பொருள்) என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல். ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப் பான  புத்தகம். இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று இதை கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.
அன்றைய தமிழகத்தில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்தில்தான் ‘தம்பிரான் வணக்கம்’ (1578) என்ற தமிழ்வரிவடிவ அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது. இதன் ஆசிரியரான அண்ட்ரிக் அடிகள் கிறிஸ்தியானி வணக்கம் (1579) என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.‘தம்பிரான் வணக்கம்’, 10X14 செ.மீ அளவில் அமைந்த  புத்தகம். தமிழ் நூலின் மேலட்டை முகப்புப் பக்கத்தில் மேலே 'Doctrina Christam  en Lingua Malauar Tamul' என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் திரித்துவக் கடவுள் (Trinity) வடிவம் மரச்செதுக்கு ஓவியமாக (8X10செ.மீ) பதிக்கப்பட்டுள்ளது. பக்க்த்தின் நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது.  பக்கத்துக்கு 24 வரிகள். இப்புத்தகத்தின் எழுத்துரு வடிவங்களில் புள்ளிகள் இடப்படாமல் சொற்களும் பிரிக்கப்படாமல் அச்சடிக்கப்பட்டுள்ளன. 18 உள்தலைப்புகள் போர்த்துகீசிய மொழியில் இருக்கின்றன. சீனக்காகித்த்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது. Doctrina Christam by Fr. Marcos Jorge அல்லது பிரான்சிஸ் சேவியர் வெளியிட்ட Doctrina Christam  என்ற போர்த்துக்கீசிய மொழி நூல்தான் அண்ட்ரிக்கால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1575ஆம் ஆண்டுவாக்கில் தமது கிழக்குக் கடற்கரை சமயப் பணிகளிலிருந்து கோவாவிற்கு மாற்றப்பட்ட பிறகு, அண்ட்ரிக் தம் நூல்களைத் தொகுக்கத் தொடங்கினார். இதற்கு தமிழ்ப் பார்ப்பனராக இருந்து 1562ஆம் ஆண்டு சேசு சபையில் இணைந்த அருட்தந்தை பெரோ லூயிஸ் துணையாயிருந்தார். லூயிசின் துணையுடன் கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கொன்சால்வசு முதல் தமிழ் அச்சுருக்களை வடித்தார்.1577ஆம் ஆண்டு கோவாவில் அண்ட்ரிக் ஐந்து நூல்களில் முதலாவதான ‘டாக்ட்ரினா கிறிஸ்டம் என் லிங்குவா மலபார் தமுல் - தம்பிரான் வணக்கம்’ (Doctrina Christam en Lingua Malauar Tamul - Tampiran Vanakam) அச்சிடப்பட்டது. ‘மலபார் தமிழில் கிறிஸ்தவ போதனை’ என்பது இதன் பொருள். பதினாறு பக்கங்கள் உடையதாக இது இருந்தது. இந்திய வரிவுருவொன்றில் வெளியான முதல் நூல் இது. இது பற்றி சில ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், கிரகாம் ஷா அந்த அச்சிடல் நிகழ்ந்ததென்பதை உறுதியாகக் கூறுகிறார். இரண்டாவதாக வெளிவந்த நூல் ‘கிரிசித்தியானி வணக்கம்’ (1578) பதினாறு பக்கங்களே உடையதாக இதுவும் இருந்தது. மூன்றாவது நூல் போர்த்துக்கலில் பரவலாகியிருந்த மார்கோசு (Fr. Marcos Jorge) என்பவர் உருவாக்கிய ‘கிறித்தவ சமயப் போதனை’ (Catechism) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 127 பக்கங்களாக வெளியானது. நவம்பர் 14, 1579ஆம் ஆண்டில் வெளியான இந்நூலுக்கான புதிய அச்சுகள் கொச்சியில் வார்த்தெடுக்கப்பட்டன. மூன்று கிறிஸ்தவ சமயப் போதனை நூல்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அச்சுருக்களில் அடுத்த மூன்றாண்டுகளில் வெளியாயின. கொச்சியில் அச்சிடப்பட்ட அண்ட்ரிக்கின் மற்ற இரு நூல்கள்: பாவ அறிக்கை நூல் (Confessionario, 1580) (214 பக்கங்கள்), அடியார் வரலாறு (Flos Sanctorum, 1586)  (669 பக்கங்கள்).
         கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்க்கைக்கழகத்துக்கு ‘தம்பிரான் வணக்கம் பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க்க் கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. லிஸ்பன் ‘கார்டில்லா‘வை பாண்டிச்செரி பிரஞ்சு நிறுவனம் மறுபதிப்பு செய்துள்ளது. பிலியோசா இதன் பதிப்பில் பங்கேற்றவர். ‘தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் ச. இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்நாடன் மூல நூலின் படப்பிரதியாக தம்பிரான் வணக்கம் நூலை இருமுறை பதிப்பித்துள்ளார்.கொல்லத்தில் வார்த்த அச்சு எழுத்துகளால் ‘தம்பிரான் வணக்கம்’ அச்சடிக்கப்பட்டது. அதன் 15ஆம் பக்கத்தில் கோவா தமிழ் எழுத்துகள் மாதிரிக்காகத் தரப்பட்டுள்ளன. கோவாவில் 1576-77 இல் தமிழ் எழுத்துகள் ஆக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ்  கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது. அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரை தம்பிரான் வணக்கம் தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்.பின் குறிப்பு : தமிழின் முதல் அச்சு நூல், தற்போது மின் நூலாக ஆழி பதிப்பகம் வெளியிட உள்ள ‘உலக கிளாசிக் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல் வரிசை‘யில் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.
துணை நூல்கள் :
Castets, J. 1929. Fr. Enrique Enriquez. Trichi : Indian catholic Truth Society.Rajamanickam, S. 1971. 'Padre Henriwue Henriwues : The father of the Tamil Press'. Proeedings of the Second International Conference Seminar of Tamil Studies. Channai : International Association of the Tamil Research.
Thaninayagam, X. 'Tamil Manuscripts in European Libraries'. Tamil Culture. Oct.1954.Thaninayagam, S. 1958. 'The First Books Printed in Tamil'. Tamil Culture, Vol. VII. 1958.இராசமாணிக்கம், ச. (பதி.). 1967. அடியார் வரலாறு. தூத்துக்குடி:  தமிழ் இலக்கியக் கழகம்.சிவசுப்ரமணியன், ஆ. 2003. தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார், சென்னை : உலகத தமிழாராய்ச்சி நிறுவனம்.
தமிழ்நாடன். 1995. தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம். தஞ்சை : எட்டாம் உலகத் தமிழ் மாநாடு.தமிழ்நாடன். 2001. தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம். சேலம்: செட்டியார் பதிப்பகம்.




புத்தகத்தின் முகப்புப் பக்கம்



Doctrina Christam
en Lingua Malauar Tamul

கொம்பஞ்ஞிய தே சேசூ வகையில்
அண்டிறிக்கிப் பாதிரியார்
தமிழிலே பிறித்தெழுதின
தம்பிரான் வணக்கம்.


பக்கம் 3



(குருசு)

சுத்தமான குருசின் அடையாளத்தால் 
எங்கள் சத்துருக்கள் எங்கள் மேல் வராமல்
காத்துக்கொள். எங்கள் தம்பிரானே
பிதாமகன் சுத்தமான இசுபிரித்து நாமத்தினாலே
ஆமென்.

(விசுவாசக் கோட்பாடு)

வானமும் பூமியும் படைத்த சறுவத்துக்கும் 
வல்லபிதாவான தம்பிரானையே விச்சுவதிக்கிறேன்.
அவனுடைய மகனொருவன் நம்முடைய நாயன்
இசேசூக்கிரிசித்தையே விச்சுவதிக்கிறேன். இவன்
சுத்தமான இசுப்பீரீத்துவினால் சனித்துக் கன்னி
மரியாள் வயிற்றில் நின்று பிறந்தான். போஞ்சியுப்
பிலாத்தின் கீட்பாடுபட்டுக் குருசிலே அறையுண்டு,
செத்தடக்கப்பட்டான். பாதாளங்களிலிறங்கி மூன்றாம்
நாள் செத்தவரிகளிடையில் நின்று உயிர்த்தான்.
வானங்களில் ஏறிச் சறுவத்துக்கும் வல்ல பிதாவாகிய
தம்பிரான் வலப்பாகத்தில் இருக்கிறான். அவடத்தில்
நின்றிருக்கிறவர்களுக்கும் செத்தவர்களுக்கும்
நடுத்தீற்க வருவான். சுத்தமான இசுபிரித்துவையே
விச்சுவதிக்கிறேன். கத்தோலிக்கவாகிய சுத்தமான
யிகிரேசையும் சுத்தமானவர்கள் கூட்டமும்
உண்டென்று விச்சுவதிக்கிறேன். 


No comments:

Post a Comment