Sunday, 19 October 2014

மாயா ஏஞ்சலோ. கால சுப்ரமணியம்


மாயா ஏஞ்சலோ  
தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

  இன்றுஆப்ரிக்க அமெரிக்கர்என்று கௌரவிக்கப்படுகிறவர்களுக்காக சமுதாய, அரசியல் தளத்தில் பாடுபட்டவர் பலர். கலை இலக்கியத் தளத்தில் பாடுபட்டவர்களில் முதன்மையானவர் மாயா எஞ்சலோ ( 4.4.1928 – 28.5.2014).

அமெரிக்க எழுத்தாளரும் கவிஞரும் ஆன மாயா ஏஞ்சலோ, ஏழு சுயசரிதைகள்பல கவிதைப் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியவர். குழந்தைப் பருவத்தில் இருந்து இருபது வயது வரையான அவரது வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் முதல் சுயசரிதைப் புனைவுத் தொடர்கூண்டுப் பறவை ஏன் பாடுவதில்லையென்று எனக்குத் தெரியும்’ (1969), மிகச் சிறப்பானதாக  அறியப்பட்டு சர்வதேச அங்கீகாரத்தையும்  பாராட்டையும் பெற்றது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதில் பகிரங்கமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(1961ல் கென்னடியின் பதவியேற்பு விழாவில் ராபர்ட் பிராஸ்ட் கவிதை வாசித்ததன் கௌரவத்துக்குப் பின்), 1993ல்  பில் கிளிண்டன் பதவியேற்பு விழாவில் (On the Pulse of Morning) கவிதை வாசிக்கும் கௌரவம் பெற்றார். ஒபாமாவும் அவரைக் கௌரவித்துள்ளார்.

 அவர் படைப்புகள், கருப்பின மக்களின், குறிப்பாகப் பெண்களின், செய்தி ஊடகமாக அவர்களது கலாச்சாரத்தைப் பாதுகாத்தவையாகக்  கருதப்படுகின்றன.  அவரது படைப்புகள் பரவலாக உலகம் முழுவதும் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.   புனைவாக விரிவாக்குவதன் மூலம் சுயசரிதையின் பொதுவான கட்டமைப்புக்குச் சவால் விடத் திட்டமிட்டு முயற்சி செய்தவர் அவர். இனவெறி , அடையாளம், குடும்பம்,  பயணம்  ஆகியவையே அவரது புத்தகங்களின்  கருப்பொருள்கள்.

அவர் சுயசரிதைகளால் புகழ் பெற்றாலும் கவிஞராகவும் போற்றப்பட்டார். கறுப்பினப் பெண்ணுக்கான கவியாக, அவர் தம் கவிதைகளை உச்சாடனமாக வாசித்தளித்தார். கவித்துவ அழகியல் குறைவு என்றாலும், வாய்மொழிக்கவிதையின் எளிமையும் நேர்மையும் உள்ளடக்கமாகி நவீன புதுக்கவிதையின் வடிவமைதி கொண்டு  அவை விளங்குகின்றன. பார்வையாளர்களுக்கான அரங்கியல் தன்மைகொண்ட கவிதைகள் (Performed Poetry) அவை. வெளிப்படையாக வெடிப்புறப் பேசியவை. அதே சமயத்தில் நுட்பத்திலும் ஆழத்திலும் குறைவுபடாதவை. கறுப்பின இலக்கியத்தின் எழுச்சியாகவும் கறுப்பினப் பெண்ணிய இலக்கியத்தின் முன்னோடியாகவும் ஏஞ்சலோவின் படைப்புகள் உள்ளன. ஏஞ்சலோவின் வாழ்க்கையும் படைப்புகளும் உலகெங்கும் ஒடுக்கப்படும் மனிதரின் மீட்சிக்கான உத்வேகத்தைத் தரும் எனலாம். 
நிறைவாழ்வு வாழ்ந்து அவர் சமீபத்தில் மறைந்தார். அவருக்கான நினைவஞ்சலியாக அவரது சில பிரபலமான கவிதைகள் இங்கு தமிழாக்கம் செய்து தரப்படுகின்றன.

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

விந்தையான பெண்

எனது ரகசியம் எதிலுள்ளது என்று
அழகிய பெண்கள் வியந்துநிற்பார்கள்
ஒரு ஃபேஷன் மாடலுக்கு  ஏற்ற கவர்ச்சியோ
அல்லது கட்டழகோ கொண்டவள் நான் அல்ல
ஆனால் நான் இதைச்
சொல்லத் தொடங்கும்போதே ,
நான் பொய் சொல்கிறேன் என்று
அவர்கள் நினைப்பார்கள்.

அது, என் கைகளின் நீட்சி அசைவில்
என் இடையின் அகற்சியில்,
என் நடையின் துள்ளலில் ,
என் இதழின் சுழிப்பில்
இருப்பதாக நான் சொல்வேன்.

அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்,
விந்தையான பெண்
இதுவே நான்.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
சாவதானமான
நான் ஒரு அறைக்குள் நுழைகிறேன்,
ஒரு ஆணிடம் செல்கிறேன்,
அந்த ஆட்கள் எழுந்துநிற்கிறார்கள் அல்லது
மண்டியிட்டுத் தாழ்ந்து பணிகிறார்கள்.
பின்பு அவர்கள் என்னைச்  சுற்றிலும்,
தேனீ அடை போல மொய்க்கிறார்கள்.

அது, என் விழிகளின் ஜுவாலையில்,
என் பல்வரிசையின் மின்னலில்,
என் இடையின் நெளிப்பில்,
என் கால்களின் நடனத்தில்
இருப்பதாக நான் சொல்வேன்.

அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.

என்னில் தாம் எதைக் கண்டனர் என்று
தங்களுக்குள் வியந்தனர் ஆண்கள்.
அவர்கள் மிகவும் முயன்றும்
எனது உள்முக ரகசியத்தை
அவர்களால் தொட முடியாமலே போனது.
நான் அதை அவர்களுக்குக்
காண்பிக்க முயன்றபோது
அவர்கள் இன்னும் அதை
காணமுடியவில்லை என்றனர்.

அது, என் பின்அழகின் வளைவில்,
என் புன்னகையின் கதிரொளியில்,
எனது நகில்களின் குதிப்பில்,
என் தனிப்பாங்கின் அருட்சியில்
இருப்பதாக நான் சொல்வேன்.

அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.

இப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
ஏன் என் தலை என்றும் குனிவதில்லை என்று.
நான் கத்துவதில்லை
அல்லது எதற்கும் திடுக்கிடுவதில்லை
அல்லது உண்மையில்
உரத்துப் பேசவும் செய்வதில்லை.
நான் உங்களைக் கடந்து செல்வதைப் பார்க்கையில்
அது உங்களைப் பெருமைப்பட வைக்கும்.

அது, என் குதிகளின் கிளிக்கிடலில்,
எனது துவலும் கூந்தலில்  
எனது கரத்தின் அங்கையில் ,
என் அக்கறையான ஒப்பனைகளில்
இருப்பதாக நான் சொல்வேன்.

ஏனெனில், நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.

  

(‘Phenomenal Woman’.Cosmopolitan magazine.1978)





இருந்தாலும் நான் உதித்தெழுவேன்


உங்கள் கடுப்பான, திரிக்கப்பட்ட பொய்களால்
வரலாற்றில் என்னை நீங்கள் வரைந்திருக்கலாம்
பாழ் சகதியில் என்னை நீங்கள் மிதித்துத் துவைத்திருக்கலாம்
அப்படி இருந்தாலும், தூசிப்புழுதியாக, நான் உதித்தெழுவேன்.

எனது நிமிர்வேதும் உங்களை வருத்துகிறதா?
ஏன் மனச்சோர்வில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள்?
என் வசிப்பறையில் எண்ணெய்க் கிணறுகள்
இறைத்திடக் கிட்டியதுபோல
நான் பெருமிதநடை கொள்கிறேனா?

சந்திரர் போலும் சூரியர் போலும்
அலையெழுச்சியின் நிச்சயத்துடன்,
நம்பிக்கைகள் உயரே பீறிடுவதைப்போல,
இப்போதும் நான் உதித்தெழுவேன்.

நான் நிலைகுலைவதை நீங்கள் காணவேண்டுமா?
குனிந்த தலையும் தாழ்த்திய விழிகளுமாக?
கண்ணீர்த்துளிகள் போல் தோள்கள் தளர்ந்து வீழ,
என் ஆத்மார்த்தமான அழுகையில் நொறுங்கிடவேண்டுமா?

என் அகங்காரம் உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
என் சொந்தக் கொல்லைப்புறத்தில் தோண்டி
தங்கச் சுரங்கங்கள் கிடைத்ததுபோல நான் சிரிப்பதையெல்லாம்,
நீங்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துகொள்ளக்கூடாது.

உங்கள் வார்த்தைகளால் என்னைச் சுட்டுப்பொசுக்கலாம்,
உங்கள் கண்களால் நீங்கள் என்னை கூறுபோடலாம்,
உங்கள் வெறுப்பினைக் கொண்டு என்னைக் கொலையும் செய்யலாம்,
அப்படி இருந்தாலும், காற்றைப் போல, நான் உதித்தெழுவேன்.
எனது கவர்ச்சி உங்களை நிலைகுலையச் செய்கிறதா?
எனது தொடைகளின் சந்தில்
வைரங்கள் கிடைத்தது போல் நான் நாடனம் ஆட,  
இது ஒரு அதிசயம்போல வரவில்லை.

வரலாற்றின் அவமதிப்புக் குடில்களில் இருந்து
நான் உதித்தெழுவேன்.
வேதனை வேரூன்றிய இறந்தகாலத்தில் இருந்து மேலே
நான் உதித்து எழுவேன்.

நான் பரந்து அலைமோதும் ஒரு கரிய கடல்,  
தாங்கியும் வீங்கியும் நான் அலையினில் பெறுவேன்.
பயங்கரத்தையும் பயத்தையும் கொண்ட
இரவுகளைப் பின்னுக்குத்தள்ளி
நான் உதித்தெழுவேன்.
அபூர்வமாய்த் தெளிந்த ஒரு வைகறைவேளையில்
நான் உதித்து எழுவேன்.
என் முன்னோர்கள் தந்த கொடைகளை அள்ளிக்கொண்டு,
நான் ஒரு கனவாகவும்
அடிமையின் நம்பிக்கையாகவும் இருக்கிறேன்.
நான் உதித்து எழுவேன்
நான் உதித்தெழுவேன்
நான் உதித்தெழுவேன்.

               (‘Still I Rise’.)


கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப் பறவை  காற்று மீதேறித் தாவிப் பாயும்
விசைதீரும் வரை சமநிலைகொண்டு மிதக்கும்
ஆரஞ்சுவண்ண சூரியக் கதிர்களில்
தன் சிறகுகளை நனைக்கும்
வானத்தை உரிமைகொள்ளும் தைரியமும் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்
குறுகிய கூட்டுக்குள் அலைகிறது.
ஆத்திரம் அதன் கம்பிகள்
எப்போதாவது அதன் வழியே பார்க்க முயலும்

அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் விலங்கிடப்பட்டும் உள்ளன.
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு,
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது
தொலைதூர மலைகளில்
அதன் இசை எதிரொலிக்கிறது.

சுதந்திரப்பறவை இன்னுமொரு தென்றலை நினைக்கிறது
பருவக்காற்று சலிக்கும் மரங்கள் வழியே மெதுவாக வீசும்.
கொழுத்த புழுப்பூச்சிகள் உணவாகக்
விடியல் வெளித்த புல்தரையில் காத்திருக்கும்,
வானம் தனக்கே சொந்தம் என்று அது பெயரிட்டழைக்கும்.


ஆனால் கூண்டுப் பறவை
கனவுகளின் கல்லறையில் நிற்கிறது.
ஒரு பயங்கரக் கனவின் அலறல் மீது
அதன் நிழல் பிரவேசிக்கிறது
அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் கட்டுண்டும் உள்ளன,
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது,
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது,
தொலைதூர மலைகளில்
அதன் இசை மோதி எதிரொலிக்கிறது.

              (‘I Know Why The Caged Bird Sings’)





பெண்ணுக்கான பணிகள்

பராமரிக்க எனக்குக் குழந்தைகள் உள்ளன
துவைக்கத் துணிகள் உள்ளன
மெழுகத் தரை உள்ளது 
மளிகைப்பொருள் வாங்க கடைக்குப் போகவேணும்
பிறகு குஞ்சுக்கோழிப் பொரியல் செய்யவேணும்
குளிப்பாட்டக் குழந்தை காத்திருக்கிறது
துணைவருக்கு உணவளிக்க வேணும்
தோட்டத்தில் நான்தான் களை பிடுங்கவேணும்
தேய்த்து வைக்கத் துணிகள் உள்ளன
செல்லப்பிள்ளைகளுக்கு நானே உடுத்திவிடவேணும்
உணவு டப்பிகள் திறக்க
இந்தச் சிறிய குடிசையைத் துடைத்துப்பெருக்க
நோயாளியை அடுத்துக் கவனிக்க
அவரது  துணிகளை எடுத்துவைக்க

பிரகாசிக்கும் சூரியனே, என்மேல் ஜொலிப்பாயாக
மழையே, என்மீது பொழிவாயாக,
பனித்துளியே, என் மேல் பதனமாய் விழுக
என் நுதலை மீண்டும் குளிர்விப்பாயாக.

இனியும் எனக்கு ஓய்வு கிடைக்க
புயலே, உன் கொடுங்காற்றால் என்னை
இங்கிருந்து ஊதிப் பறக்கவிடுக
வானத்தில் என்னை மிதக்கவிடுக 

பனிமழையே, மிருதுவாய்ப் பொழிக
மூடுக என்னை
உன் வெண்குளிர் முத்தத்தால்,
இன்றிரவென்னை ஓய்வெடுக்க விடுக.

சூரியன், மழை, தொடுவான்,
மலை, கடல், இலை,
வைரம் மினுங்கும் நட்சத்திரம்,
ஒளிரும் நிலா  
உங்களையெல்லாம் மட்டுமே 
என்னவர்களாக நான்
சொந்தம் கொண்டாட முடிகிறது.

                        (‘Woman Work’)  



முகவரி : கால சுப்ரமணியம் ( Dr. K.Subramanian, 155, East Street, Nehru Nagar, Sathyamangalam-638402. kasu.layam@gmail.com / 6383675433.

No comments:

Post a Comment